Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி
    Home
  • Today Horai

ஆடி அமாவாசை - 2025

அமாவாசை என்பது ஒவ்வொரு மாதமும் வர கூடியது. அதில் தை, ஆடி மற்றும் புரட்டாசி இந்த மூன்று மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு மிக்கது.

இந்த பதிவில் ஆடி அமாவாசை 2025 ஆம் ஆண்டு எப்போது வருகிறது, அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், யார் செய்யலாம், என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது, மற்றும் பல சந்தேகங்களுக்கான பதில்களை காண்போம்.

 

ஆடி அமாவாசை 2025 – தேதி மற்றும் நேரம்:

  • தேதி - ஜூலை 24 (ஆடி-08), வியாழன் அன்று வருகிறது.
  • அமாவாசை திதி தொடக்கம் – ஜூலை 23, இரவு 3.06 மணி.
  • அமாவாசை திதி முடிவு – ஜனவரி 24, இரவு 1.48 மணி.

 

ஆடி அமாவாசை மகிமை

நம் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடன் ஆடி அமாவாசை அன்று செய்யும் பொழுது, அது அவர்களிடம் சென்றடைந்து அவர்களின் ஆசி முழுமையாக நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் வந்தடையும் என்பது ஐதீகம்.

 

ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை:

எள்ளு மற்றும் நீர் இரைத்தல்:

அந்தகர் ஒருவரை ஏற்பாடு செய்து ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தங்கரையிலோ இந்த சடங்கை பூர்த்தி செய்யலாம். ஒருவேளை அந்தகர் மூலம் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே இந்த சடங்கை செய்யலாம். பின்பு குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ எண்ணி இறை வழிபாடு செய்ய வேண்டும்.

 

படையல் இடுவது:

நம் பித்ருக்களுக்கு பிடித்த சைவ உணவை சமைத்து வடை, பாயாசத்துடன் படையல் போடலாம். அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை படையலிடும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பிடித்த உணவு மற்றும் காய்கறி தெரியாத பட்சத்தில், சாதம், சாம்பார், ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு வறுவல் அல்லது குறைந்தபட்சம் இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து,வடை, பாயாசத்துடன் அவர்களின் உருவ படத்திற்கு முன்பு வாழை இலையில் படையலிட வேண்டும்.

 

தானம் கொடுப்பது:

நம்மால் முடிந்த அளவிற்கு அன்னதானம் மற்றும் ஆடை தானம் செய்யலாம். அதிகம் இல்லையென்றாலும் ஒருவருக்கு மட்டுமாவது நம் பித்ருக்களை எண்ணி ஆடை மற்றும் உணவு தானம் செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு தானம் கொடுப்பதன் மூலம் நமக்கு சனீஸ்வரரின் ஆசியும் கிடைக்கும்.

 

விளக்கேற்றி வழிபாடு:

மாலையில் அவர்களுக்காக விளக்கேற்றி, தூபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

 

யார் யார் என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது

ஆண்கள்:

தாயையோ, தந்தையையோ, மனைவியையோ அல்லது பிள்ளைகளையோ இழந்த ஆண்கள் மேலே கூறியுள்ள அனைத்தையும் செய்யலாம்.

 

பெண்கள்:

கணவனை இழந்த பெண்கள் மேலே கூறியுள்ள அனைத்தையும் செய்யலாம்.கணவன் உயிருடன் இருக்கும் பட்சத்தில் அந்த பெண் யாருக்காகவும் எள்ளு மற்றும் நீர் இரைத்தல் சடங்கை செய்யக் கூடாது. மற்றவைகளை தாராளமாக செய்யலாம்.

 

சந்தேகங்கள்

1. அமாவாசை அன்று வாசலில் கோலம் போடலாமா?

போடக் கூடாது. ஒருவேளை கோலம் போட வேண்டிய சூழல் ஏற்பட்டால் பித்ரு வழிபாட்டை பூர்த்தி செய்த பின் கோலம் போடலாம்.

 

2. பிரம்ம முகூர்த்தத்தில் பித்ரு வழிபாடு செய்யலாமா?

செய்யக் கூடாது. பித்ருக்களுக்கான வழிபாடு சூரிய உதயத்திற்கு பிறகே செய்ய வேண்டும்.

 

3. அமாவாசை வழிபாடு செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் இதை பின்பற்றலாமா?

நிச்சயமாக. அமாவாசை வழிபாடு நம் முன்னோர்களுக்காக செய்யப்படுவது. ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள், சுபகாரிய தடங்கல்கள் நீங்க இந்த வழிபாடு உதவும்.

 

4. எங்கள் அப்பா, அம்மாவிற்கு ஆண் வாரிசு இல்லை, பெண் பிள்ளைகள் மட்டும் தான். நாங்கள் இந்த வழிபாட்டை செய்யலாமா?

தாராளமாக.மேலே குறிப்பிட்டபடி கணவன் இல்லாத பட்சத்தில் தாய், தந்தை, மாமனார், மாமியார் என்று யாருக்காக வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுத்து மற்ற வழிபாடுகளையும் பின்பற்றலாம். கணவன் உயிருடன் இருக்கும் போது எள்ளு மற்றும் நீர் இரைத்தல் சடங்கை தவிர்த்து மற்றவைகளை செய்யலாம்.