Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி
    Home
  • Today Horai

இன்றைய கிரக ஓரை

⏳ தற்போதைய ஓரை:
( - )

கிரக ஓரை :

பொதுவாக நல்ல முகூர்த்தம் கண்டுபிடிக்க நம்முள் பலரும் ஜோதிடரை ஆலோசிக்கிறோம். ஜோதிடர் பஞ்சாங்கத்தை பார்த்து ஒரு சிறந்த முகூர்த்தத்தை வழங்குகிறார்கள். ஆனால் சில நேரங்களில், பல காரணங்களால் பண்டிதரை அணுக முடியாமல் போகிறது. இதற்காக ஜோதிட சாஸ்திரம், ஒரே நாளுக்குள் நல்ல மற்றும் கெட்ட நேரங்களை அறிய கிரக ஓரை என்ற முறையை உருவாக்கியுள்ளது. இந்த கிரக ஓரை முறை மூலம் ஒருவருக்கே ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்க ஜோதிடர் இல்லாமலே உதவுகிறது.

பொதுவாக இரவு 12 முதல் அடுத்த இரவு 12 வரை உள்ள நேரத்தையே ஒரு நாள் குறிப்பிடுவோம். ஆனால், ஜோதிட கணக்கின் படி ஒரு நாள் என்பது, ஒரு சூரியோதயத்திலிருந்து அடுத்த சூரியோதயம் வரையிலான காலமாகும். ஒரு நாளில் 7 வகையான ஹோரைகள் உள்ளன, ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஓரை என்ற கணக்கில் மொத்தம் 24 ஹோரைகள் ஒரு நாளில் வரும். இந்த ஏழு ஹோரைகளும் சூரியன்,சுக்ரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் ஒரு நிரந்தர மற்றும் நிலையான சுழற்சி அடிப்படையில் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆட்சி ஓரை உண்டு. அந்த ஆட்சி ஓரையை கொண்டே அந்த நாள் தொடங்கும்.

ஞாயிறு - சூரிய ஓரை

திங்கள் - சந்திர ஓரை

செவ்வாய் - செவ்வாய் ஓரை

புதன் - புதன் ஓரை

வியாழன் - குரு ஓரை

வெள்ளி - சுக்கிர ஓரை

சனி - சனி ஓரை

ஓரைகளின் பலன்கள் :

சூரிய ஓரை:- அதிகாரம், அரசியல், பொது நிர்வாகம், தொழில்

இது ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் ஓரை ஆகும். சூரிய ஓரை ஆற்றல் நிறைந்தது மற்றும் சக்திவாய்ந்தது. எனவே, அதிகாரம், அரசியல், பொது நிர்வாகம், தொழில் தொடர்பான காரியங்களுக்கு நல்ல பலனளிக்கும். உதாரணமாக அரசியல் நபர்களை சந்திக்கும் நிகழ்வுகள், அரசியல் தொடர்பான செயல்கள், நீதிமன்ற வழக்குகள், பொறுப்புகளை ஒப்படைத்தல் அல்லது ஏற்கல், அரசாங்க அதிகாரிகளை சந்திப்பது, அரசு வேலைக்கு சேர்ந்தல், பொது நிர்வாகம் சம்பந்த பட்ட வேலைகள், சொந்த தொழில் ஆகியவற்றை தொடங்கவோ அல்லது முயற்சிக்கவோ உகந்த நேரமாகும். சூரிய ஓரை சுப ஓரை அல்ல எனவே, மற்ற சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

சுக்ர ஓரை:- அழகு, கலையியல், திருமணம்

இது வெள்ளிக்கிழமை அன்று முதல் ஓரை ஆகும். சுக்ர ஓரை அழகு மற்றும் இணைக்கும் தன்மையுடையது. எனவே, காதல், திருமணம் மற்றும் ஆண் - பெண் உறவுத் தொடர்பான செயல்கள் ஆகியவற்றிற்கு நல்ல பலனளிக்கும். இதேபோல், இசை, கலை மற்றும் நடனம் போன்ற பொழுதுபோக்கு செயல்களுக்கும், புதிய ஆடைகள், அணிகலன்கள் வாங்கவும் சுக்ர ஓரை பரிந்துரைக்கப்படுகிறது. சுக்ர ஓரை சுப ஓரை ஆகும். எனவே, மற்ற சுப காரியங்களுக்கும் நல்ல பலனளிக்கும்.

புதன் ஓரை:- கல்வி, தகவல், பயணம்

இது புதன்கிழமை அன்று முதல் ஓரை ஆகும். புத ஓரை வேகம் மற்றும் விவேக தன்மையுடையது. எனவே, கல்வி, புதிய திறன்களை கற்றல், ஊடகச் செயல்கள், பயணம் சார்ந்த வேலைகள், கணக்கு வழக்கு பார்த்தல், ஆராய்ச்சி தொடர்பான வேலைகள், ஒப்பந்தத்தை உறுதி செய்தல் போன்ற செயல்களுக்கு உகந்த நேரமாகும். புத ஓரை சுப ஓரை ஆகும். எனவே, மற்ற சுப காரியங்களுக்கும் நல்ல பலனளிக்கும்.

சந்திர ஓரை:- உணவு, தண்ணீர், படைப்பு

இது திங்கட்கிழமை அன்று முதல் ஓரை ஆகும். சந்திர ஓரை மென்மை மற்றும் நுட்பமான தன்மையுடையது. எனவே, ஆபரணங்களை வாங்குதல், படைப்பு செயல்களில் ஈடுபடுதல், மற்றும் தண்ணீருடன் தொடர்புடைய வேலைகள் போன்றவற்றைச் செய்யலாம்.உதாரணமாக, தோட்ட வேலை, உணவுடன் தொடர்புடைய செயல்கள், கடலுடன் தொடர்புடைய வேலைகள், முத்து மற்றும் சங்கு தொடர்பான பணிகள், வெள்ளி தொடர்பான வேலைகள், மற்றும் பெண்கள் தொடர்பான பணிகள் ஆகியவற்றுக்கு இந்த ஓரை சிறப்பாக பரிந்துரைக்கப்படுகிறது. வளர்பிறை நாட்களின் சந்திர ஓரை சுப ஓரை ஆகும். எனவே, மற்ற சுப காரியங்களுக்கும் நல்ல பலனளிக்கும்.

சனி ஓரை:- கடின உழைப்பு, தாமதம்

இது சனிக்கிழமை அன்று முதல் ஓரை ஆகும். சனி ஓரை சுறுசுறுப்பில்லாத மற்றும் தாமதப்படுத்தும் தன்மையுடையது. அதனால் விரைவாக முடிக்க வேண்டிய செயல்களுக்கு இதனை தவிர்ப்பது சிறந்தது. இருப்பினும் இந்த ஓரையில், கட்டிடத்தின் அடித்தளம் அமைப்பது, விவசாய வேலைகள், எண்ணெய் மற்றும் இரும்பு சார்ந்த பணிகள் இந்த ஓரை பயன்படுத்தலாம். சனி ஓரை சுப ஓரை அல்ல. எனவே, மற்ற சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

குரு ஓரை:- ஆன்மிகம், வழிகாட்டுதல், உயர்கல்வி

இது வியாழக்கிழமை அன்று முதல் ஓரை ஆகும். குரு ஓரை இது பயனளிக்கும் மற்றும் விருத்தி தரும் தன்மையுடையது. இந்த ஓரை மிகவும் மங்களகரமான ஓரை என்று கூறலாம். எனவே, புதிய முயற்சிகளை தொடங்குவது, நிதி தொடர்பான செயல்கள், திருமண பேச்சுவார்த்தைகள், வீட்டின் கட்டுமானத்தைத் தொடங்குவது மற்றும் வீடு புகுவது, மற்றும் ஆன்மிக செயல்கள் போன்ற பல செயல்களை நாம் செய்யலாம். குரு ஓரை சுப ஓரை ஆகும். எனவே, எல்லா விதமான சுப காரியங்களுக்கும் நல்ல பலனளிக்கும்.

செவ்வாய் ஓரை:- உழைப்பு, தீவிர முயற்சி, சட்டவியல்

இது செவ்வாய்க்கிழமை அன்று முதல் ஓரை ஆகும். செவ்வாய் ஓரை வலிமை மற்றும் ஆவேசமான தன்மையுடையது. இந்த ஓரை மங்களகரமான செயல்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளுக்கு தவிர்க்கப்பட வேண்டிய நேரம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த ஓரையில் தீ மற்றும் வெப்பத்துடன் தொடர்புடைய வேலைகள், வழக்குத் தொடருதல், நிலம் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளை செய்யலாம். அதே போல், செவ்வாய்க்கிழமை அன்று வரும் செவ்வாய் ஓரையில் கடன் அடைப்பது, கடன் அடைக்க முயற்சி எடுப்பது போன்ற காரியங்களும் நல்ல மாற்றத்தை தரும். செவ்வாய் ஓரை சுப ஓரை அல்ல. எனவே, மற்ற சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.