Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி
    Home

மறப்போம். மன்னிப்போம்

ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன. தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார். ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது. இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள் என்று கட்டளையிட்டார். வேலைக்காரன் கெஞ்சினான், நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன், நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள்! ராஜா ஒப்புக்கொண்டார். அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான். காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார். அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான். அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான். பத்து நாட்கள் முடிந்தது. வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார். அவன் தூக்கி எறியப்பட்டபோது, ​​அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின. இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்! இதைப் பார்த்து திகைத்த அரசன், "என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?" என்றான். வேலைக்காரன் பதிலளித்தான், "நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்கு சேவை செய்தேன், அவை என் சேவையை மறக்கவில்லை. நான் உங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்தும் என் முதல் தவறைக்கூட மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து என்னை தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!" அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார். நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம். ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் எம்மிலும் இல்லாமல் இல்லை. தவறு செய்வது மனித சுபாவம். இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம். மறப்போம்,மன்னிப்போம்.