Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி
    Home

அலட்சியம் வேண்டாம்

ஒரு கிராமத்தில் இரண்டு பேர் புதிதாக முட்டை கடை திருக விரும்பினர். இருவரும் தங்களுக்கு தேவையான முட்டைகளை பக்கத்து ஊர் சந்தையில் இருந்து வாங்க மாட்டு வண்டியில் கிளம்பி சென்றனர். முதலில் முட்டை வாங்கி வைக்க இருவரும் பெட்டிகளை வாங்கினர். முதலாமவன் 10 ரூபாய்க்கு பெட்டி வாங்கினான். இரண்டாமவன் 10 ரூபாய்க்கு பெட்டியும் 2 ரூபாய்க்கு பூட்டும் வாங்கினான். இதை பார்த்த முதலாமவன், இவன் எதற்கு தேவையில்லாமல் 2 ரூபாயை வீணாக்கி பூட்டு வாங்குகிறான் என்று நினைத்துக் கொண்டான். இருவரும் தங்களுக்கு தேவையான முட்டைகளை வாங்கிவிட்டு மாட்டு வண்டியில் கிராமத்திற்கு கிளம்பினர். வெயில் கடுமையாக இருந்ததால் போகும் வழியில், மரத்தடியில் மாட்டுவண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் பக்கத்திலிருந்த ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்றனர். தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வரும் போது, குரங்குகள் பூட்டு போடாத பெட்டியை திறந்து முட்டைகளை எடுத்து வீசி நாசமாக்கி கொண்டிருந்தன. இருவரும் குரங்குகளை விரட்டி அடித்து விட்டு வண்டியை பார்த்த போது, பூட்டு போட்ட பெட்டியிலுள்ள முட்டைகள் பத்திரமாக இருந்தன. பூட்டு போடாத பெட்டியில் இருந்த பாதி முட்டைகள் உடைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த முதலாமவன், 'ஒரு சிறிய பூட்டு போட்டிருந்தால் நமது முட்டைகளும் பத்திரமாக இருந்திருக்குமே' என்று வருத்தப்பட்டான். சின்ன சின்ன விஷயங்களிலும் கவனமாக இருங்கள்.