Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி
    Home

வீண் பழி போடாதே

ஒரு அரசன் ஒரு புலவருக்கு விருந்தளித்து கொண்டிருந்தான். அப்பொழுது வானில் கழுகு ஒன்று பாம்பைத் தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அதையறியாமல் அரசன் அந்த உணவை அந்த புலவருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் துடித்துப் போனான்! புலவரின் மரணம் அவனை வேதனையில் ஆழ்த்தியது. கர்மாக்களுக்கான வினைபயன்களை நிர்ணயிக்கும் சித்திரகுப்தருக்கு, இக் கர்மவினைப் பயனை யாருக்குக் கொடுப்பது? என்று குழப்பமாகிவிட்டது. கழுகிற்கா? பாம்பிற்கா? அல்லது அரசனுக்கா? கழுகு, பாம்பைத் தூக்கிக் கொண்டு சென்றது அதன் தவறில்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றமும் இல்லை. அரசனுக்கோ, உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனறியாமல் நடந்தச் செயல். எனவே யாருக்கு இந்தப் பாபம் போய் சேரும்! என்று சித்ரகுப்தருக்கே முடிவெடுக்க முடியவில்லை. இதைப்பற்றி யமதர்மரிடமே கேட்போம் என்று தன் குழப்பத்தைக் கூறினார்! சித்ரகுப்தர். சித்திரகுப்தர் கூறியதைக் கேட்ட யமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும்! அதுவரை பொறுமையாக இரு! என்றார். ஒரு சில நாட்கள் கழித்து, மற்றொரு புலவர் அரசனின் உதவியை நாடி வந்தார். அவர் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணியிடம் வழி கேட்டார். அப்பெண்மணியும் அவருக்கு சரியான பாதையை கூறிவிட்டு, இந்த அரசன், இரக்கமற்ற கொடியவன்! புலவர்களை கொல்பவன்!அவனிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள்! என்றாள். இவ்வாறு அவள் கூறி முடித்ததும், அடுத்த நொடி சித்திரகுப்தருக்கு தெளிவு பிறந்து விட்டது. *புலவரை கொன்ற கர்மாவின் வினை பயன் முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும்* என்று முடிவெடுத்தார். எவ்வாறு......? மற்றவர்கள் மீது வீண் பழி சுமத்தும் பொழுது அந்தப் பாபம் முழுவதும், பழி சுமத்துபவருக்கே வந்து சேரும். "உண்மையை அறியாமல் அபாண்டமாகப் பிறர் மீது பழி சுமத்துவோரும், தெரிந்தே வீண் பழியைப் பிறர் மீது சுமத்துவோரும் அந்தந்த கர்மவினைகளின் பயன் முழுவதும் வந்து சேரும்! அதை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்".🙏 எந்தவொரு விஷயத்தையும் திரித்து, பொய் சொல்லி, மற்றவர்கள் மீது பழி சுமத்தும் ஒவ்வொருவரும், அதற்கான வினைபயனை அனுபவித்தே தீர வேண்டும்! என்பது நியதி. எனவே, உண்மைகளை மட்டுமே சொல்லுவோம்! நன்மைகளை மட்டுமே பெறுவோம்! பிறரது சாபத்தையும், பழியையும் வீணே நாம் பெற்றுவிடக் கூடாது. எனவே பிறர் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதைத் தவிர்ப்போம். எனவே தேவையற்று பிறரது பாபங்களை நாம் சுமக்காதிருப்போம். அனைத்தும் இறை மயம்; எல்லாம் இறைவனின் செயல்.