ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன். அங்கே இங்கே வேலை தேடினான் — ஆனால் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு ஆள் இந்த பையனை வேலைக்கு எடுத்துக்கொண்டார். முதலில் சில நாட்கள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு, ஒரு எருமை மாட்டுத் தோலை கொடுத்தார். ஏன், எதற்கு என்று கேட்காமல் அவன் அதை வாங்கிக்கொண்டான். அந்த ஆள் நான்கு சாக்குப் பைகளை எடுத்தார். ஒட்டகம் ஒன்று ஏற்பாடு செய்தார். “புறப்படலாம்” என்றார். பையன் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் இருவரும் ஒட்டகத்தில் ஏறி பயணம் ஆரம்பித்தனர். செங்குத்தான மலை ஒன்று வந்தது. ஒட்டகத்தை நிறுத்தினார். பையனை இறக்க வைத்தார். “இந்த மாட்டுத் தோலை விரித்து அதில் படுத்துக் கொள்” என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் படுத்துக்கொண்டான். அவர் அதனை நான்கு பக்கங்களிலும் சுருட்டி ஒரு கயிறால் கட்டினார். அந்த பையனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு, மரம் ஒன்று பின்னால் ஒளிந்தார். அந்த தோல் மூட்டையை இரண்டு பெரிய கழுகுகள் பறந்து வந்து தூக்கிக் கொண்டு செங்குத்தான மலை உச்சிக்குப் போட்டன. அலகால் கொத்தின. உள்ளே இருந்த பையன் வெளியே வந்ததும் கழுகுகள் பயந்து ஓடின. அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள். முதலாளி கீழே நின்று “என்ன செய்கிறாய், கற்களைப் பொறுக்கி கீழே போடு” என்றார். அவன் அப்படியே செய்தான். அவன் கேட்டான், “நான் எப்படி கீழே இறங்குவது?” “முதலில் கற்களைப் போடு; அப்புறம் சொல்கிறேன்” என்றார். நான்கு சாக்கும் நிரம்பி ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு முதலாளி புறப்பட்டார். “முதலாளி!” என்று பையன் அழைத்தான். “முட்டாளே! என் வேலைக்காரர்களுக்கு நான் இப்படித்தான் வேலை கொடுக்கிறேன். மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அவன் திரும்பிப் பார்த்தான் — எலும்புக்கூடுகள் மட்டுமே! அவன் ஏமாந்ததை புரிந்து கொண்டான். அப்போது ஒரு கழுகு பறந்து வந்தது. அவன் அதனை பிடித்துக் கொண்டான். கழுகு பயந்து மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் தரையில் இறங்க, பையன் குதித்து தப்பினான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் வேலைக்குப் போனான். அவர் ஆச்சரியப்பட்டார் — இது வேறு ஆளா? என்று நினைத்துக் கொண்டு வேலைக்கு வைத்தார். இரண்டு நாள் கழித்து, வழக்கம்போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு பையனையும் அழைத்துக் கொண்டு மலைக்குப் போனார். முதலாளி சொன்னார், “படுத்துக் கொள்.” பையன், “எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்களே காட்டுங்களேன்” என்றான். முதலாளி சிரித்தார். “இதுவும் தெரியலையா?” என்று சொல்லி படுத்தார். அப்புறம் என்ன? பையன் உடனே சுருட்டி கட்டிவிட்டான். கழுகுகள் வந்து முதலாளியைக் கொண்டு போன. மேலே போய் நவரத்தினங்கள் பார்த்தார். பையன் கீழிருந்து, “பொறுக்கி கீழே போடுங்க” என்றான். முதலாளி கேட்டார், “மலை உச்சியில் இருந்து தப்பிச்சது எப்படி?” “முதலில் கற்களைப் போடுங்கள், அப்புறம் சொல்கிறேன்” என்றான். அவர் அப்படியே செய்தார். பையன் நான்கு சாக்குகளும் கட்டிக்கொண்டு புறப்பட்டான். முதலாளி, “எப்படி தப்பிச்சான் என்பதைச் சொல்லிவிட்டு போ” என்றார். பையன் சொன்னான் “உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளிடம் கேளுங்கள்!” வினை விதைத்தவன்… வினை அறுப்பான்!